திருக்குறள் - 1061     அதிகாரம்: 
| Adhikaram: iravachcham

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

குறள் 1061 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karavaadhu uvandheeyum kannannaar kannum" Thirukkural 1061 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரவாது உவந்து ஈயும்கண் அன்னார் கண்ணும் இரவாமை-தம்மிட முள்ளதை ஒளிக்காது, அரும்பெறலுறவினர் வந்தாரேயென்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை கூர்ந்திறத்தல்; கோடி உறும்-அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும் செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம். மானங் கெட இரந்துண்பதினும், அது கெடாது இயன்றவரை யுழைத்து வறுமையிற் செம்மையாய் வாழ்தலும் அது இயலாவிடத்து உயிர் துறத்தலும், மேல் என்பதாம். உம்மை உயர்வு சிறப்பு. ’கோடி’ ஆகுபொருளது. இக்குறளால் இரத்தலின் இழிவு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடைவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறுப்படையாமல் விருப்பமுடன் கொடுக்கும் கண் போன்றவர் இடத்திலும் கேட்காமல் இருப்பது கோடி நன்மையாகும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.

Thirukkural in English - English Couplet:


Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

ThiruKural Transliteration:


karavaadhu uvandheeyum kaNNannaar kaNNum
iravaamai koati uRum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore