கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.
Transliteration
kataaak kaLitrinmaeR katpadaam maadhar
pataaa mulaimael thukil.
🌐 English Translation
English Couplet
As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast.
Explanation
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
2 மணக்குடவர்
மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.
3 பரிமேலழகர்
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(அவள் முலைகளினாலான வருத்தங் கூறியது.) மாதர் படாமுலைமேல் துகில் - இப் பெண்ணின் சரியாத முலைகளின்மேல் - அமைந்த கச்சு; கடாக் களிற்றின்மேற் கண்படாம் - மதயானையின்மேல் இருமத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்த முகபடாத்தையொக்கும். முலைக்கச்சு மதயானையின் முகபடாத்தையொப்பது, தோற்றப்பொலிவும் அஞ்சத்தக்கதும் எல்லாரும் தொடமுடியாததுமான இடத்திருப்பதும் பற்றியாம். மாந்தருள் பாகன் தவிர வேறொருவரும் முகபடாத்தைத் தொடமுடியாததுபோல, ஆடவருட் காதலன் தவிர வேறொருவரும் முலைக்கச்சைத் தொடமுடியாமை நோக்குக. இருமுலைபோல் இருமத்தகமிருப்பின் உவமைக்குத் துணையாம்.ஆடவர் கைபடாக் கன்னி முலையாதலின், அதன் விடைப்புங் கட்டமைப்புந் தோன்றப் 'படாஅமுலை' என்றார்.'கடாஅ' , 'படாஅ' இசைநிறையளபெடைகள்.மாதர் என்னுஞ் சொற்கு முன்னுரைத்தாங் குரைக்க (குறள்.1081). முலைக்கச்சை நாணுடை மகளிர் மார்பை மறைத்த துகில் என்று, மார்யாப்புச் சேலையாகப் பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது.
5 சாலமன் பாப்பையா
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
6 கலைஞர் மு.கருணாநிதி
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.
7 சிவயோகி சிவக்குமார்
கட்டுக்கு அடங்காத ஆண் யானை மேல் அணியப்பட்ட கட்படாம் போல் மாதர்க்கு நிலைத்து நிற்காது முலைமேல் துகில்.
8 புலியூர்க் கேசிகன்
இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.
More Kurals from தகையணங்குறுத்தல்
அதிகாரம் 109: Kurals 1081 - 1090
Related Topics
Because you're reading about Beauty & Attraction