திருக்குறள் - 658     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththooimai

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

குறள் 658 - திருவள்ளுவர் - ThiruValluvar

"katindha katindhoraar seydhaarkku avaidhaam" Thirukkural 658 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச்செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்- அவ்வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும். முடிதல் வெற்றியாய் முடிந்து கருதிய பொருள் தருதல். ஒருவார் என்பது ஒரார் எனக்குறைந்து நின்றது. 'முடிந்தாலும்' ஐயவும்மை பீழைதருவன வினையும் வினையால் வந்த பொருளும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நூலோர் தீயவை யென்று நீக்கிய தொழில்களைப் பொருள் கருதி நீக்காமல் செய்த அமைச்சர்க்கு அவை ஒருவகையில் முடிந்தாலும் துன்பத்தினையே தரும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறுக்கப்பட்டதை வெறுக்காமல் ஏற்று செய்தவருக்கு அச்செயல் முடிவு பெற்றாலும் பெருந்துன்பமே விளையும்.

Thirukkural in English - English Couplet:


To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.

ThiruKural Transliteration:


katindha katindhoraar seydhaarkku avaidhaam
mutindhaalum peezhai tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore