Kural 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

katraarmun katra selachchollith thaamkatra
mikkaarul mikka koLal.

🌐 English Translation

English Couplet

What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.

Explanation

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

2 மணக்குடவர்

தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.

3 பரிமேலழகர்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க. (எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கற்ற கற்றார்முன் செலச்சொல்லி-தாம் கற்றவற்றை அவையல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல்-தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க. 'மிக்காருள் மிக்க கொளல்' என்பதனால், 'கற்றார் முன்' என்பதற்குத் தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண் என்று பொருள் கூறப்பட்டது. 'மிக்க' என்றது, ஒரு துறைப்பட்ட உயர்ந்த பொருள்களையும் பிறதுறைப்பட்ட வேறு பொருள்களையுமாம். பல்துறைக் கல்வியுடையார் ஒரே அவையினராயும் வெவ்வேறு அவையினராயுமிருக்கலாம் வெவ்வேறு துறைக்கல்வி கற்றவர் ஒருவருக்கொருவர் இருதலைப் பரிமாற்றஞ் செய்து கொள்ளலாமென்பது, இக் குறட்கருத்து.

5 சாலமன் பாப்பையா

பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.

6 கலைஞர் மு.கருணாநிதி

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

கற்றவர்கள் முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.

More Kurals from அவையஞ்சாமை

அதிகாரம் 73: Kurals 721 - 730

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature