கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து.
Transliteration
katraRindhaar kalvi viLangum kasatarach
choldheridhal vallaar agaththu.
🌐 English Translation
English Couplet
The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.
Explanation
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
2 மணக்குடவர்
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
3 பரிமேலழகர்
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து -வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவைக்கண் உரை நிகழ்த்தின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் -பலநூல்களையுங் கற்று அவற்றின் பொருளை அறிந்தவரின் கல்வி விளங்கித்தோன்றும். சொல் என்றது சொற்பொழிவை. உரை நிகழ்த்தின் என்பது அவாய் நிலையால் வந்தது. "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்."
5 சாலமன் பாப்பையா
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.
7 சிவயோகி சிவக்குமார்
கற்று அறிந்தவர் இடத்தில் கல்வி வெளிப்படுவதைப் போலவே, அழுக்கற்ற வார்த்தைகள் அறிந்தால் பேசும் வல்லமை உள்ளே தோன்றும்.
More Kurals from அவையறிதல்
அதிகாரம் 72: Kurals 711 - 720