"kavvaiyaal kavvidhu kaamam adhuvindrael" Thirukkural 1144 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
காமம் கவ்வையால் கவ்விது-என் காமம் இவ்வூரார் எடுத்த அலராலே அலர்தலைக் கொண்டுள்ளது; அது இன்றேல் தன்மையிழந்து தவ்வென்னும்-அவ்வலரில்லையாயின் சுவையிழந்து சப்பென்றிருக்கும். கவை-கவ்வை=பிளப்பு,பிரிவு,மலர்வு,அலர். கவ்வை-கவ்விது. அலர்தல் அலர்க் கூற்றுப் பரவுதலும் காமம் வளர்தலும், 'தன்மை' இன்பம் பயத்தல். தவ்வுதல்-தாழ்தல்.ஏதேனுமொரு பாடத்துறையில் மாணவர் தாழ்வாயிருப்பதைக் தவ்வல் என்பது நெல்லை நாட்டு வழக்கு.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
பழிச்சொல்லால் பழிக்கபடுவது காமம் அப்படி இல்லை என்றால் வளர்ப்புத் தாய் இன்றி அதன் தன்மை இழந்துவிடும்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே!
Thirukkural in English - English Couplet:
The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.
ThiruKural Transliteration:
kavvaiyaal kavvidhu kaamam adhuvindrael
thavvennum thanmai izhandhu.