Kural 1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kayalunkan yaanirappath thunjir kalandhaarkku
uyalunmai saatruvaen man.

🌐 English Translation

English Couplet

If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.

Explanation

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

2 மணக்குடவர்

என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.

3 பரிமேலழகர்

(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். ('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தூதுவிடக் கருதியாள் சொல்லியது.) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - தூக்கம் பெறாது வருந்துகின்ற என் கயல் மீன்போலும் மையுண்ட கண்கள் யான் வேண்டிக்கொண்டால் தூங்குமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - காதலரைக் கனவிற் கண்டு நான் பிரிவாற்றக் கூடிய தன்மையைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச் சொல்வேன். தூதரிடம் சொல்லக் கூடாத மருமச் செய்திகள் உட்பட, எல்லாவற்றையும் பறைசாற்றினாற்போலத் தெளியச் சொல்வேன் என்னும் கருத்தினாற் 'சாற்றுவேன்' என்றாள். என் கண்களும் தூங்கச் சாற்றலுங் கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசை. முன்னுங் கண்ட பட்டறிவாற் சொன்னமையின், கனவுநிலையுரைத்த தாயிற்று. 'கயலுண்கண்' என்றாள் தன் கணவனொடு கூடியிருந்த காலத்து நலம் அழிந்தமைக்கிரங்கி. கயல் என்பது சேல்கெண்டை. 'உயல்' இறந்து படாமை.

5 சாலமன் பாப்பையா

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

7 சிவயோகி சிவக்குமார்

மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால் உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.

8 புலியூர்க் கேசிகன்

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்!

More Kurals from கனவுநிலையுரைத்தல்

அதிகாரம் 122: Kurals 1211 - 1220

Related Topics

Because you're reading about Dreams of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature