கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
Transliteration
kazhaaakkaal paLLiyuL vaiththatraal saandroar
kuzhaaaththup paedhai pugal.
🌐 English Translation
English Couplet
Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.
Explanation
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
2 மணக்குடவர்
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.
3 பரிமேலழகர்
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பேதை சான்றோர் குழாத்துப் புகல்-பேதையானவன் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் அவையின்கண் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்த அற்று--கழுவித் துப்புரவு செய்யாத காலைத் தெய்வ நிலையமான கோவிற்குள் வைத்தாற் போலும். இக்குறளிலுள்ள உவமக் கூற்றில் 'பள்ளி' என்பது பலபொருளொருசொல். பிறரெல்லாம் படுக்கை அல்லது படுக்கையறை யென்றே பொருள் கொண்டனர். பரிமேலழகர் அமளியென்னுஞ் சொல்லையாண்டார். மணக்குடவ பரிபெருமாளர் பள்ளியென்னும் மூலச் சொல்லையே ஆண்டனர். "தூய வல்ல மிதித்த காலை இன்பந் தரும் அமளிக்கண்ணே வைத்தாற்போலும்" .என்னும் பரிமேலழகர் உவமவுரை பொருத்தமாகத் தோன்றுவதே . ஆயின், முழுப்பொருத்தமாகத் தோன்றவில்லை.'இன்பந்தரும் அமளி' என்பது சான்றோரவையில் இன்பத்தன்மையையும் துப்புரவுத் தன்மையையும் குறிக்குமேயன்றி , அதன் சிறப்பியல்பான தெய்வத்தன்மையை எடுத்துக் காட்டாது . "அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் -திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்." [ நாலடி. 151] என்பதனால் சான்றோரின் தெய்வத்தன்மை உணரப்படும். 'கழாக்கால்' என்பது,அழுக்குந் தூசியும் நீராற்போக்கப்படாத காலையும். வெளிச் சென்று கழுவாத காலையும், நரகலை மிதித்துக் கழுவாதகாலையுங் குறிக்கும். அத்தகைய துப்புரவற்ற காலைப் படுக்கைறையில் வைத்தாலும், சமையலறை, ஊணறை, சரக்கறை, இருக்கையறை, அலுவலறை முதலிய பிறவிடங்களில் வைத்தாலும், ஏறத்தாழ ஒன்றே. ஆதலால், இங்குப் பள்ளி யென்பது , அருகிலுள்ள திருக்குளத்திற் குளித்தோ குளியாதோ காலை நீரால் துப்புரவாக்கியல்லது புகக்கூடாத, தேவகமாகிய கோவிலைக் குறித்ததாகக் கொள்வதே சிறப்புடையதாம். 'உள்' என்னும் இடவேற்றுமையுருபு கோவிற்கன்றி அமளிக் கேற்காமையையும் நோக்குக. வீட்டிலும் வேறிடத்திலும் குளித்து வருவார்க்கும் வரும்வழியிற் காலிற் படிந்த மாசைப் போக்குவதற்கே, கோயில்தோறும் திருக்குளமும் அருகிலுள்ளது. இதனால்,'கோயில் குளம்' என்பது ஓர் இணைச் சொல்லாகவும் வழங்கி வருகின்றது . எப்பொருளதாயினும் , பள்ளி யென்பது தூய தமிழ்ச்சொல் லெனபதைப் பின்னிணைப்பிற் கண்டு தெளிக. கழாஅக்கால் என்பது வெளிச்சென்று கழுவாத காலைக் குறிப்பின் இடக்கரடக்கல். 'கழா அ', 'குழா அத்து' இசைநிறையளபெடைகள். 'ஆல்' அசைநிலை.
5 சாலமன் பாப்பையா
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.
7 சிவயோகி சிவக்குமார்
கழுவாத கால்களுடன் படுக்கைக்குச் செல்வதைப் போன்றது சான்றோர் கூட்டத்திற்குப் பேதைச் செல்வது.
8 புலியூர்க் கேசிகன்
சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.
More Kurals from பேதைமை
அதிகாரம் 84: Kurals 831 - 840
Related Topics
Because you're reading about Folly