திருக்குறள் - 116     அதிகாரம்: 
| Adhikaram: natuvu nilaimai

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

குறள் 116 - திருவள்ளுவர் - ThiruValluvar

"keduvalyaan enpadhu arikadhan nenjam" Thirukkural 116 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின் ; யான் கெடுவல் என்பது அறிக - அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , " நான் இனிக்கேடடைவேன் , " என்று திட்டமாய் அறிந்து கொள்க. கருதுதல் மனத்தின் செயலாதலின் ' செயின் ' என்றார் . ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது இன்னிசை யளபெடை . நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக்குறளாற் கூறப் பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமையில் நீங்கி ஒன்றினைச் செய்ய நினைக்குமானால் அந்த நினைப்பு 'யான் கேட்டு விடுவேன்' என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பாக அறிதல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடப்போகிறேன் நான் என்பதை அறியட்டும் நெஞ்சம் நடுநிலை தவறியதை செய்தால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக!

Thirukkural in English - English Couplet:


If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish.".

ThiruKural Transliteration:


keduvalyaan enpadhu aRikadhan nenjam
natuvoreei alla seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore