திருக்குறள் - 1313     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

குறள் 1313 - திருவள்ளுவர் - ThiruValluvar

"koattup pooch chootinum kaayum oruththiyaik" Thirukkural 1313 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் புலவிக் குறிப்பைக் கண்டு நீவிர் கூடியொழுகிவரவும், இது நிகழ்தற்குக் கரணகம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - இம்மருத நிலத்து நீர்ப் பூவும் கொடிப்பூவு மன்றி வேற்று நிலத்துக் கோட்டுபூவைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற் காதலிக்கப்பட்ட வேறொருத்திக்கு இப்பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீரென்று சீற்றங் கொள்வாள் என் காதலி இத்தகையாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ? கோட்டுப்பூ மரக்கிளைகளில் மலர்வது. கோடு - கிளை. வேற்று நிலம் முல்லை குறிஞ்சி நெய்தல். கோட்டுப் பூவைக் கோடுதலைச் செய்யும் மாலை என்றார் பரிமேலழகர். ஆசிரியர் மாலையென்னாது பூவென்றமையாலும், "கோடுதலைச் செய்யும்" என்னுங் கருத்தில் ஒருசிறப்பு மின்மையானும், அது உரையன்மை அறிக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புதுவித மலர் சூடி அழுகு செய்து கொண்டால் நினைவில் சுமக்கும் ஒருத்திக்கே குறிப்பு காட்டு சூடினீர் என்கிறாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள்.

Thirukkural in English - English Couplet:


I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.

ThiruKural Transliteration:


koattup-pooch chootinum kaayum oruththiyaik
kaattiya sootineer endru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore