கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.
Transliteration
koLaRkaridhaaik koNtakoozhth thaaki akaththaar
nilaikkeLidhaam neeradhu araN.
🌐 English Translation
English Couplet
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.
Explanation
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
2 மணக்குடவர்
பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது. எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.
3 பரிமேலழகர்
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கொளற்கு அரிதாய்-உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி- உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது. உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலைசூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகுதற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப்பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதாய்த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சியாரைத் தாக்கா வாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.
5 சாலமன் பாப்பையா
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.
6 கலைஞர் மு.கருணாநிதி
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நீரால் செய்யப்பட்டாலும் அந்நீரை எளிதாக எற்காத கூழ் போல் தனது அகத்தே இருப்பவருக்கு எளிதாக இருப்பதே அரண்.
More Kurals from அரண்
அதிகாரம் 75: Kurals 741 - 750