கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு.
Transliteration
kootiya kaamam pirindhaar varavullik
koaduko daerumen nenju.
🌐 English Translation
English Couplet
'He comes again, who left my side, and I shall taste love's joy,'-
My heart with rapture swells, when thoughts like these my mind employ.
Explanation
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
2 மணக்குடவர்
கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி- காமம் நீங்கியவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நம் காதலர் காமங் கூடியவராய் நம்மிடம் திரும்பி வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும்- என் உள்ளம் வருத்தம் நீங்கி மேன்மேற் பணைத் தெழுகின்றது. அந் நினைவின்றேல் இறந்து படுவேன் என்பதாம். வினைவயிற் பிரியு மிடத்து அதற்குத் தடையாக வுள்ள காமத்தை நோக்காது வினையையே நோக்குதலும், வினை முடிந்த விடத்துக் காமத்தையே மிகுதியாக நோக்குதலும், தலைமகனுக் கியல்பாதலின் 'கூடிய காமம்' என்றாள். இதில் ஒடு வுருபு தொக்கது. கூடிய காமத்தொடு என விரியும். கோடு கிளை. கோடு கொண்டேறுதல் மேன்மேற் கிளைத் தெழுதல். மரத்தின் தொழில் நெஞ்சினமே லேற்றப்பட்டது. 'கொடு' கொண்டு என்பதன் தொகுத்தல் இக்குறட்கு. "கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றும் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாரா நின்றது." என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் உரை; 'கூடிப் பிரிந்த நாயகர் வரும் வழி பார்த்து ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப் பார்க்கும். என்பது பரிதியார் உரை. கோடு மலை. குவடு- கோடு.
5 சாலமன் பாப்பையா
என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.
7 சிவயோகி சிவக்குமார்
காமத்துடன் கூடியவர் பிரிந்தார் அவரது வரவை எண்ணி கொம்பை பற்றும் கொடி அதன் அளவை மீறியதுப் போல் அளவைக் கடக்கிறது என் நெஞ்சு.
8 புலியூர்க் கேசிகன்
முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே!
More Kurals from அவர்வயின்விதும்பல்
அதிகாரம் 127: Kurals 1261 - 1270