திருக்குறள் - 867     அதிகாரம்: 
| Adhikaram: pakaimaatchi

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

குறள் 867 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kotuththum kolalvaendum mandra atuththirundhu" Thirukkural 867 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும். மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை-போரைத் தொடங்கி அண்மையிலிருந்து கொண்டு தனக்குத்தானே மாறானவற்றைச் செய்வான் பகையை; கொடுத்தும் மன்ற கொளல் வேண்டும்-அவன் விரும்பிய பொருளை விலையாகக்கொடுத்தாயினும் உறுதியாகப் பெறல் வேண்டும். அடுத்திருந்து தனக்குக் கேட்டை வருவித்துக் கொள்பவனது நாட்டைக் கைப்பற்றுதலோ, அவனிடமிருந்து பெரும்பொருள் பெறுதலோ, கூடுமாதலின், 'கொடுத்துங் கொளல் வேண்டும் மன்ற' என்றார். அப்பகை அத்துணைப் பயன்படுவ தென்பது கருத்து. 'மன்ற' தேற்றப் பொருளிடைச்சொல். "மன்றவென்கிளவி தேற்றஞ் செய்யும்." (தொல். இடை. 17). உம்மை எச்சம். மாணாத செய்தலாவன, மெலியனாயிருந்து பொருதலும் தோற்றலும் வலியனாயிருந்து பொராதிருத்தலும் பொருள்களை விட்டுவிட்டுப் பின்வாங்கிப்போதலும். இவ்வாறு குறளாலும் பகைமாட்சி வகைகளும் அவற்றின் விளைவும் கூறப்பட்டன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதையாவது கொடுத்து பெற வேண்டும் கூடி இருந்தே கூடாதன செய்வான் பகையை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தொடங்கும்போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

ThiruKural Transliteration:


kotuththum koLalvaeNdum mandra atuththirundhu
maaNaadha seyvaan pakai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore