Kural 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kuNamnhaatik kutramum naati avatruL
mikainhaati mikka koLal.

🌐 English Translation

English Couplet

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.

Explanation

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

2 மணக்குடவர்

ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.

3 பரிமேலழகர்

குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக. ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும்.

6 சாலமன் பாப்பையா

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

ஒருவரின் குணத்தை அறிந்துக் குற்றமும் அறிந்து அவைகளில் அதிகமானதை அறிந்து அதுவே அவரது பண்பாய்க் கொள்ளவேண்டும்.

More Kurals from தெரிந்துதெளிதல்

அதிகாரம் 51: Kurals 501 - 510

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature