குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
Transliteration
kuNanhalam saandroar nalanae piRanhalam
enhnhalaththu uLLadhooum andru.
🌐 English Translation
English Couplet
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.
Explanation
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
2 மணக்குடவர்
சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.
3 பரிமேலழகர்
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; பிற நலம் எந்நலத்து உள்ளதும் அன்று - மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று. குடிப்பிறப்பு, கல்வி முதலியனவாக நூலோரால் வகுக்கப்பெறும் எந்நலத்தோடும் சேர்த்தெண்ணப் படாமையால், உறுப்பு நலத்தை 'எந்நலத் துள்ளதூஉ மன்று' என்றார். 'உள்ள தூஉம்' இன்னிசை யளபெடை; ஏகாரம் பிரிநிலை.
5 சாலமன் பாப்பையா
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
6 கலைஞர் மு.கருணாநிதி
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
7 சிவயோகி சிவக்குமார்
குணம் நலமாக இருப்பதே சான்றோரக்கு நலன். மற்றைய நலன்கள் எப்படி இருப்பினும் குணநலம் போன்றது இல்லை.
8 புலியூர்க் கேசிகன்
சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.
More Kurals from சான்றாண்மை
அதிகாரம் 99: Kurals 981 - 990
Related Topics
Because you're reading about Nobility