திருக்குறள் - 898     அதிகாரம்: 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

குறள் 898 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kundrannaar kundra madhippin kutiyodu" Thirukkural 898 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர். குன்ற மதித்தல்- அவமதித்தல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குன்று அன்னார் - மலை போலும் மாதவர்; நிலத்து நின்ற அன்னார் குன்ற மதிப்பின் - இந்நில வுலகத்தில் அழிவின்றி நிலைபெற்றவர் போல் தோன்றும் பெருஞ்செல்வப் பேரரசர் கெடக்கருதுவராயின்; குடியொடு மாய்வர் - அவர் தம் இனத்தொடும் அழிந்து போவர். தட்பவெப்பத்தையும் பிறர் செய்த தீங்கையும் பொறுத்துக் கொள்ளுதலும், சூறாவளி வீசினும் பெருந்துன்பம் நேரினும் உடலுளம் அசையாமையும், ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்றலும், இம்மை மறுமை வீடென்னும் மும்மையுமு பற்றிய அறிவுப் பொருள் வளமும், ஆவிவளர்ச்சிப்பெருமையும் ,நெடுந்தொலைவுந் தோன்றுஞ் சீர்த்தியும் உடைமையால், 'குன்றன்னார்' என்றார். "மல்லன் மலையனைய மாதவரை" என்று சிந்தாமணி கூறுவதும் (முத்தி. 191)இக்கருத்தைப் பற்றியே. குன்றென்னுஞ் சொல் இங்குத்தன் சிறப்புப் பொருளைக் குறியாது மலையென்னும் பொதுப்பொருள் குறித்து நின்றது.'மதிப்பின்' என்பதற்கும் 'குடியொடு மாய்வர்' என்பதற்கும் ,முந்திய குறளில் 'செறின்' என்பதற்கும் 'வகை' மாண்ட ... என்னாம்' என்பதற்கும் உரைத்தவாறுரைக்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குன்று போல் சிறப்பு வாய்ந்தவரை குறைத்து மதிப்பவர் நிலத்தில் நிலைக்காமல் குடியோடு அழிவார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள்.

Thirukkural in English - English Couplet:


If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

ThiruKural Transliteration:


kundrannaar kundra madhippin kutiyodu
nindrannaar maaivar nilaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore