திருக்குறள் - 696     அதிகாரம்: 

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

குறள் 696 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kuripparindhu kaalang karudhi veruppila" Thirukkural 696 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி¢ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்பு அறிந்து-அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செய்தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பையறிந்து;காலம் கருதி-சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி;வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல்-அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க. கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது காமம் பற்றிய அவலமும், பகையரசர் இகழ்ந்து ஓலைவிடுத்தபோது வெகுளியும் பிறந்து, வேறு செய்தி சொல்வார்மீது வெறுப்பையும் சினத்தையும் விளைக்குமாதலின்,'குறிப்பறிந்து' என்றும்; வேட்டையாடவும் உரிமை மகளிரொடு விளையாடவும் கருதியபோது, போர்தவிர வேறெச்செய்தியிலும் மனம் பதியாதாகலின்,'காலங்கருதி'என்றும் கூறினார்.அரண்மனைப் பொற்கொல்லன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை அவன் தேவி ஊடிய காலத்துக்கண்டதும், அவ்வூடல் நீங்குதற் கேதுவான செய்தியுடைமை பற்றியே. "அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்" (638) என்றமையால், இங்கு'வெறுப்பில' என்றது வினைக்குரியன அல்லாதவற்றை யென அறிக. அரசர் தெய்வத் தன்மை யுடையராதலின்,இன்பமாகச் சுருக்கியும் விளக்கியும் சொல்லுக வென்பார்'வேட்பச் சொலல்' என்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளரின் அகச்சூழலை குறிப்பறிந்து, தகுந்த நேரம் அறிந்து, வெறுக்காதபடி வேண்டியதை விரும்பும்படி சொல்லவேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

ThiruKural Transliteration:


kuRippaRindhu kaalanG karudhi veRuppila
vaendupa vaetpach solal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore