குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.
Transliteration
kutidhazheeik koaloachchum maanhila mannan
atidhazheei nhiRkum ulagu.
🌐 English Translation
English Couplet
Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.
Explanation
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
2 மணக்குடவர்
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
3 பரிமேலழகர்
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும். அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து. அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்த விடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும் . மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெருநில வரசன் . குறு நில மன்னர் , பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால் , வேந்தனை மாநில மன்னன் என்றார் . கோல் , உலகு என்பன ஆகுபெயர் . கோல் என்ற தற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார் . ஓச்சுதல் உயர்த்துதல் . குடி என்றது தளர்ந்த குடிகளை , 'தழீஇ' இன்னிசையளபெடை.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தம் குடிமக்களை அனைத்துச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னனது அடியைப் பொருந்தி உலகத்தோர் விடாது நிற்பர்.
6 சாலமன் பாப்பையா
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.
8 சிவயோகி சிவக்குமார்
குடிமக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாய் ஆணைகள் பிறப்பிக்கும் ஆட்சியாளரையே பின்பற்றிச் செயல்படும் உலகம்.
More Kurals from செங்கோன்மை
அதிகாரம் 55: Kurals 541 - 550
Related Topics
Because you're reading about Just Rule