குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
Transliteration
kutimatindhu kutram perukum matimatindhu
maaNda uGnatri lavarkku.
🌐 English Translation
English Couplet
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Explanation
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
2 மணக்குடவர்
குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.
3 பரிமேலழகர்
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு -சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு - குடிமடிந்து குற்றம் பெருகும். - குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும் 'உஞற்று' என்னும் சொல்வரலாறு 592-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது. குற்றம் மேற் கூறப்படும்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
சோம்பலிலேயே வீழ்ந்தமிழிந்து சிறந்த முயற்சி இல்லாதவர்களுக்குத் தனது குடியும் அழிந்து குற்றமும் பெருகிவிடும்.
6 சாலமன் பாப்பையா
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
8 சிவயோகி சிவக்குமார்
உள்ளது சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும் சோம்பலால் கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.
More Kurals from மடியின்மை
அதிகாரம் 61: Kurals 601 - 610