குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
Transliteration
kutippiRandhaar kaNviLangum kutram visumpin
madhikkaN maRuppoal uyarndhu.
🌐 English Translation
English Couplet
The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.
Explanation
The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
2 மணக்குடவர்
உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஞா. தேவநேயப் பாவாணர் குடிப் பிறந்தார்கண் குற்றம் - உயர்குடிப் பிறந்தவரிடத்திலுள்ள குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - வானத்தின்கண் வெண்ணிலாவிலுள்ள களங்கம்போல் எல்லார்க்குந் தெரியுமாறு உயர்ந்து விளங்கித் தோன்றும். விசும்பு மதி மறு என்னும் மூன்றும், முறையே, குடி குடிப்பிறந்தார் குற்றம் என்னும் மூன்றற்கும் உவமமாம். குடியின் உயர்வினாலும், வெண்ணிலாப் போன்ற குடிப் பண்பொடு பொருந்தாமையாலும், கறைபோலுங் குற்றம் உலகெங்கும் விளங்கித் தோன்று மென்பதாம்.
5 சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நற்குடியில் பிறந்தவர் இடத்தில் வெளிப்படும் குற்றம் வானத்து முழுநிலவு போல் பெரிதாக தெரியும்.
8 புலியூர்க் கேசிகன்
உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.
More Kurals from குடிமை
அதிகாரம் 96: Kurals 951 - 960