குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.
Transliteration
kutram ilanaaik kutiseydhu vaazhvaanaich
chutramaach chutrum ulagu.
🌐 English Translation
English Couplet
With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.
Explanation
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
2 மணக்குடவர்
குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.
3 பரிமேலழகர்
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை-ஒரு குற்றமுஞ் செய்யாது தன் குடியை யுயரச் செய்தொழுகுவானை; உலகு சுற்றமாச் சுற்றும்-அவன் குடியைச் சேர்ந்தார் அனைவரும், அவனுக்குச் சுற்றமாயிருத்தலை விரும்பித் தாமே சென்று அவனைச் சூழ்வர். குற்றங்கள் அறநயன் (நீதி) முறை (நியாயம்) நடுநிலைகட்கு மாறான செயல்கள். சுற்றம் உறவினராகச் சுற்றியிருக்கும் கூட்டம். உலகு’ வரையறுத்த ஆகுபெயர்.
5 சாலமன் பாப்பையா
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
குற்றம் இல்லாதபடி குடும்பத்தை வழிநடத்தி வாழ்பவரை உறவாக ஏற்று கொள்ளும் உறவு பாரட்டும் உலகு.
8 புலியூர்க் கேசிகன்
குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.
More Kurals from குடிசெயல்வகை
அதிகாரம் 103: Kurals 1021 - 1030