"maarupaadu illaadha undi maruththunnin" Thirukkural 945 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
மாறுபாடு இல்லாத உண்டி- உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை; மறுத்து உண்ணின்- ஒருவன் தன் விருப்பத்திற்கு இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்குமளவு குறைத்து உண்பானாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை- அவனுயிர்க்கு நோயினால் துன்பமுறுதல் இராது. செரிமானத்தைப்போன்றே ஒத்த வுணவை யுண்பதும் இன்றியமையாத தாதலின், 'மாறல்ல' என்று மேற்கூறியதையே இங்கு 'மாறுபாடில்லாத வுண்டி' என்று வழிமொழிந்தார். மறுத்தலென்பது நிரம்பவுண்ண வேண்டுமென்னும் ஆசைக்கிணங்காமை. 'உண்ணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது. (943) -ஆம் குறளில் 'அளவறிந் துண்க' என்றதனை இங்கு 'மறுத்துண்க' என வரையறுத்தார். ஊறு என்பது தேர்ச்சி. அது இங்கு வழக்குப் பற்றித் துன்ப நேர்ச்சியைக்குறித்தது. இங்குக் குறித்த துன்பம் நோய். ஊறுவது ஊறு; படுவது பாடு என்பது போல; துன்பமுறுவது உயிரேயாதலின் அதன்மேல் வைத்துக் கூறப்பட்டது. ஒத்த வுணவையும் ஒரு சிறிது குறைத் துண்டல் நன்றென்பதாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
மனதிற்கும் உடலுக்கும் மாறுபாடு இல்லாமல் விருப்பமான உணவாக இருப்பினும் அளவிற்கு அதிகமாகாமல் மறுத்து அளவுடன் உண்டால் எவ்வித தொல்லையும் இல்லை உயிர்க்கு.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.
Thirukkural in English - English Couplet:
With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel.
ThirukKural English Meaning - Couplet -Translation:
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.
ThiruKural Transliteration:
maaRupaadu illaadha uNdi maruththuNNin
ooRupaatu illai uyirkku.