திருக்குறள் - 973     அதிகாரம்: 
| Adhikaram: perumai

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

குறள் 973 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maelirundhum maelallaar maelallar keezhirundhum" Thirukkural 973 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுகாயப் படிமுறை யொழுங்கில், பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சியிலிருந்தும், ஒழுக்கங் கெட்டவராயின் உயர்ந்தோரல்லர்; கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார்- உண்மையாகத்தாழ்ந்தவ ரல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர், பிராமணரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவராகார். "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." என்று முன்பும்(குறள் .134.), "பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்று இங்கும் ஆசிரியர் கூறியிருப்பதால், "செயற்கரிய செய்கலாது சிறியராயினார், உயர்ந்த வமளி முதலியவற்றின் மிசையிருந்தாராயினும், பெரியராகார். அவை செய்து பெரியராகார் தாழ்ந்த வறுநிலத்திலிருந்தாராயினும், சிறியராகார். 'மேலிருத்தல் கீழிருத்தல்களாற் செல்வ நல்குரவுகளும் கருதப்பட்டன' என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது, இதிலுள்ள அணிசொற்பொருள் பின்வருநிலை. இவ்விரு குறளாலும் பிறப்பாற் சிறப்பில்லை யென்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும் நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

Thirukkural in English - English Couplet:


The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

ThiruKural Transliteration:


maelirundhum maelallaar maelallar keezhirundhum
keezhallaar keezhal lavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore