திருக்குறள் - 409     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai 2

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

குறள் 409 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maerpirandhaa raayinum kallaadhaar keezhppirandhum" Thirukkural 409 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும்-கல்லாதவர் கல்விநிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார நிலைமையும் பற்றிய மேல்வகுப்புக்களிற் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப்பாடு இலர் -அந்நால் நிலைமையும் பற்றிய கீழ்வகுப்புக்களிற் பிறந்திருந்துங் கற்றவரைப்போல அத்துணைப் பெருமையுடையவரல்லர். எல்லாநாடுகளிலும், அறிவுத்தொழிலார், ஆட்சித் தொழிலார், படைத்தொழிலார், வணிகத்தொழிலார், உழவுத்தொழிலார், பெருஞ்செல்வர் ஆகியோர் மேலோராகவும்; ஏவலர் (Peons), வண்ணார், மஞ்சிகர் (Barbers), பறம்பர் (Shoemakers), வீட்டுவேலைக்காரர், கூலிவேலைக்காரர் முதலியோர் கீழோராகவும்; கருதப்படுவது இயல்பே. திருவள்ளுவர் "பிறப்பொக்கு மெல்லாவுயிர்க்கும்" என்றும், "ஒழுக்க முடைமை குடிமை" என்றும், கூறியிருத்தலால், மேற்பிறந்தார் கீழ்ப்பிறந்தார் என்னும் மன்பதைப் பாகுபாடு மேற்கூறிய நால்வேறு நிலைமை பற்றியதேயன்றி, பரிமேலழகர் உரைத்தது போல் ஆரிய முறைப்பட்ட பிறவிக்குலப் பிரிவினையைத் தழுவிய தாகாது. எடிசன் செய்தித்தாள் விற்போராகவும் தாலின் (Stalin) பறம்பராகவும் இருந்து, அறிவாலும் ஆட்சியாலும் மேன்மை பெற்றமை காண்க, ஆரியமுறைப்படி பறம்பன் ஆள்வோனாகமுடியாது. "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (புறம்.183). "சிறப்பின் பாலார் மக்கள், அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு (மணி.23:31-2). "தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டா னென்றிகழார்-காணாய் அவன்றுணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல். (நாலடி. 136). "எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்". (வெற்றி. 38) என்பன இக்குறட் கருத்தைத் தழுவியன . "உடலோடொழியுஞ் சாதியுயர்ச்சி" என்று ஒருவன் வாழ்நாள் முழுதும் குலம் மாறாதிருப்பதாகப் பரிமேலழகர் கூறியிருப்பது ஆரிய நச்சுக் கருத்தாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சமூக அமைப்பில் மேல் பிறந்த கல்லாதவர் கிழ் பிறந்த கற்றார் முன் ஏதும் அற்றவரே

Thirukkural in English - English Couplet:


Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

ThiruKural Transliteration:


maeRpiRandhaa Raayinum kallaadhaar keezhppiRandhum
katraar anaiththilar paadu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore