"makkalae poalvar kayavar avaranna" Thirukkural 1071 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
கயவர் மக்களே போல்வர்- கீழ்மக்கள் வடிவால் முற்றும் மேன்மக்களை ஒத்திருப்பர்;அவர் அன்ன ஒப்பாரியாம் கண்டது இல்- அவர் மேன்மக்களை யொத்திருத்தற் போன்ற வொப்பை வேறெந்த ஈரினத்திடையும்யாம் கண்டதில்லை. மக்கள் என்றது மக்கட் பண்புள்ள மேலோரை.கயவரென்றது அஃதில்லாத கீழோரை. மாந்த இனத்தைச் சேர்ந்த இவ்விரு வகுப்பாரும் இருவேறினம் போன்றே ஆசிரியராற் கொள்ளப்பட்டிருப்பதை வேறிடத்துங் காண்க. (குறள்.410,420).அறிவிவிலிகளான கல்லா மாந்தரும் கயவரான பொல்லா மாந்தரும் மாக்கள் எனப்படுவர்.அறிவும் ஒழுக்கமும் ஒருங்குடையாரே மக்கள் எனப்பெறுவர், மக்களும் மாக்களுமாகிய இருமாந்த வகுப்பாரும் பண்புண்மையின்மையாலன்றி வடிவால்மட்டும் வேறுபாடறியப் படாமையின். அவரவர் தன்மையறிந்து மக்களென உறவாடுவதும் விலங்கெனப் பயன்படுத்துவதுஞ் செய்க என்பதாம். இனி, இக்குறட்கு, கயவர் மக்களைவடிவால் ஒப்பர். ஆனால், கயவரை வடிவாலும் குணத்தாலும் ஒப்பார் பிறரில்லை யென்றும் உரைப்பர். அவர் என்றது அவரிடைப்பட்ட ஒப்புமையை.ஏகாரம் தேற்றம்.ஒப்பாரி ஒப்பு. 'ஆரி' ஓர் ஈறு.இனி, ' "தன்னொழி மெய்ம்முன் யவ்வரின் இகரந் துன்னு மென்று துணிநரும் உளரே". என்று பவணந்தியார் (206) கூறியுள்ளவாறு, ஒப்பார்+ யாம்= ஒப்பாரியாம் என்று புணர்ப்பினுமாம்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
மனிதர்கள் போலவே இருப்பார்கள் கயவர்கள். அவர்களைப் போன்று ஒன்றுப் பட்ட ஒன்றை நான் கண்டதில்லை.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.
Thirukkural in English - English Couplet:
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).
ThiruKural Transliteration:
makkaLae poalvar kayavar avaranna
oppaari yaangaNda thil.