திருக்குறள் - 1142     அதிகாரம்: 
| Adhikaram: alararivuruththal

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

குறள் 1142 - திருவள்ளுவர் - ThiruValluvar

"malaranna kannaal arumai ariyaadhu" Thirukkural 1142 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது-குவளைமலர் போலுங் கண்ணையுடையாளைப் பெறுதற் கருமையை அறியாது; இவ்வூர் எமக்கு அலர் ஈந்தது-இவ்வூரார் அவளை எளியளாக்கி என்னொடு தொடர்பு படுத்தும் அலரை எனக்கு அளித்துதவினர். 'அருமை' அல்ல குறிப்பாட்டாலும் பல்வேறு இடையீடுகளாலும் தடைகளாலும் நேர்ந்தது. ஆருயிரளித்த பேருதவிபற்றி 'ஈந்தது' என்றான். 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மலர் போன்ற கண்களை உடையவளின் பெருமை அறியாமலேயே வதந்தி பேசி உதவியது இவ்வூர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


குவளை மலரைப் போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே!.

Thirukkural in English - English Couplet:


The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

ThiruKural Transliteration:


malaranna kaNNaaL arumai aRiyaadhu
alaremakku eendhadhiv voor.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore