மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
Transliteration
manaiyaaLai anjum maRumaiyi laaLan
vinaiyaaNmai veeReydha lindru.
🌐 English Translation
English Couplet
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
Explanation
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
2 மணக்குடவர்
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
3 பரிமேலழகர்
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று-வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை. இல்லறஞ்செய்தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையிலாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெய்தலின்று' என்றும், கூறினார்.
5 சாலமன் பாப்பையா
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.
8 புலியூர்க் கேசிகன்
தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது.
More Kurals from பெண்வழிச்சேறல்
அதிகாரம் 91: Kurals 901 - 910