Kural 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

manandhooimai seyvinai thooimai irandum
inandhooimai thoovaa varum.

🌐 English Translation

English Couplet

Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.

Explanation

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

2 மணக்குடவர்

மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.

3 பரிமேலழகர்

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம். (மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் செயல் தூய்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரும் - இனத் தூய்மையைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றும். மனத்தூய்மையாவது தனக்குத் தீதென்று தோன்றுவதைப் பிறர்க்குச் செய்யாமைக்கும், நன்றென்று கண்டதை அவர்க்குச் செய்தற்கும், ஏதுவான அறப்பான்மை, அல்லது அன்புநிலை. மனத்தூய்மையால் வினைத்தூய்மையுந்தானாக அமையுமேனும், பட்டறி வில்லாதவர்க்கு வினைசெய்யும் முறை தெரியாமையின், அவரை அதிற் பயிற்று வதற்கும் இனத்தூய்மை வேண்டியதாயிற்று, இரு தலைப்பட்ட மனத்தையும் வினையையுங் குறிக்கவே இடைப்பட்ட சொல்லும் அடங்கிற்று. இனி மனத்தைப் பொறியாகக்கொண்டு, வினை என்பது முக்கரணவினை என்று கூறினும் பொருந்தும். 'செய்வினை' என்பது செய்யும் வினையெல்லாம் என்று பொருள்பட நின்றது. ஆறாம் வேற்றுமைத் தொகையாக வந்து வலிமிக்குப்புணர வேண்டிய தொடர்கள், இன்னோசை பற்றி எழுவாய்த் தொடராக மாறி மெலிமிக்கும் இயல்பாகப் புணர்ந்தும் நின்றன.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மனம் தூய்மையுடையவனாகும் தன்மையும், செய்யும் தொழில் தூய்மையுடையதாகும் தன்மையும் ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனம் தூய்மையாயுள்ள தன்மையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு வருவனவாகும்.

6 சாலமன் பாப்பையா

மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

8 சிவயோகி சிவக்குமார்

நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும் சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான் இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும்.

More Kurals from சிற்றினஞ்சேராமை

அதிகாரம் 46: Kurals 451 - 460

Related Topics

Because you're reading about Avoiding Bad Company

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature