மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
Transliteration
mangalam enpa manaimaatchi matru adhan
nankalam nanmakkat peru.
🌐 English Translation
English Couplet
The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.
Explanation
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
2 மணக்குடவர்
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
3 பரிமேலழகர்
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
மனைமாட்சி மங்கலம் - மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நன்மக்கட்பேறு அதன் நன்கலம் - நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது; என்ப - என்று கூறுவர் அறிந்தோர். மங்கலமென்பது நெடுநன்மை. அறிந்தோர் என்னும் எழுவாய் எஞ்சி நின்றது. 'மற்று' அசைநிலை; பெயர்மாற்று எனினும் ஒக்கும். இல்லறத்திற்கு அணிகலங் கூறுமுகத்தான் அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.
6 சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
7 கலைஞர் மு.கருணாநிதி
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
8 சிவயோகி சிவக்குமார்
முழுமை என்பது குடும்ப வாழ்க்கை அதன் சிறப்பே நல்ல குழந்தைகளை பெறுவது.
9 புலியூர்க் கேசிகன்
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.
More Kurals from வாழ்க்கைத் துணைநலம்
அதிகாரம் 6: Kurals 51 - 60
Related Topics
Because you're reading about Marriage & Partnership