Kural 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

maNinheerum maNNum malaiyum aNinhizhaR
kaadum udaiya tharaN.

🌐 English Translation

English Couplet

A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.

Explanation

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

2 மணக்குடவர்

தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

3 பரிமேலழகர்

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மணிநீரும்-(மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய அகழிநீரும்; மண்ணும்-அதனையடுத்த வெறு நிலமும்; அணிநிழல் காடும்- அதனையடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும்; மலையும்-அதனையடுத்த பல நீள் மலையும்; உடையது அரண்-தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது. மதிலரண், நீரரண், காட்டரண், மலையரண் என அரண் நால்வகையாகச் சொல்லப்படினும், இங்கு ஆசிரியர் சிறப்பாக அரணென்று எடுத்துக்கொண்டது மதிலரணையே. இதை, 'உடையது அரண்' என்று மணிநீர் முதலிய நான்கையும் அரணுறுப்பாகச் சொல்லியிருப்பதனாலும், அடுத்த குறளாலும் அறிக. அகழிநீர் ஆழமாகவும் என்றும் வற்றாததாகவும் இருந்து கடல்நீரின் நிறத்தைக் கொண்டிருக்குமாதலால் 'மணிநீர்' என்றார். மணி என்பது தொண்வகை ஒளிக்கற்கட்கும் பொதுப்பெயராயினும், சிறப்பாக நீல மணியைக் குறிப்பதை மணிமிடற்றோன் (சிவன்) மணிவண்ணன் (திருமால்) முதலிய பெயர்களால் அறிக. அகழியையடுத்து வெள்ளிடை நிலம் இருப்பது பகைவர் வந்ததை அறிதற் பொருட்டும், அவர் மீது மதில்மிசை மறவர் அம்பெய்தற் பொருட்டும். அதையடுத்த 'அணிநிழற்காடு' பகைவர் தனித் தனியாகவன்றிப் படையாகத் திரண்டு வருவதைத் தடுத்தற் பொருட்டும், பகைவரின் வரவு பார்க்கும் காவல் மறவர் துன்ப மின்றிக் காத்தற் பொருட்டும். இக்காடே மிளையென்றும் காவற் காடென்றும் பெயர் பெறுவது. முல்லைக்கு அப்பாற்பட்டதே குறிஞ்சி. செய்யுளிற் பொழிப்பு மோனை நோக்கி 'மலை' முன்னின்றது. மலை நெய்த லல்லாத் திசையில் நீண்டகன்றுயர்ந்திருப்பன. இவை மேலிருந்து காவல் செய்யவும், கணவாய்களின் வழிவரும் பகைவரைத் தடுக்கவும் கொல்லவும், உதவுவன. வெறுநிலத்தை மருநிலமென்றார் பரிமேலழகர். மரு என்பது மணல் வெளியையும் பாலை நிலத்தையுங் குறிக்கும் வடசொல்லாதலின், இவ்விடத்திற்குப் பொருந்தாது.

5 சாலமன் பாப்பையா

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

பாதுகாக்கப் பட்ட நீரும், வளமான மண்ணும், குளிர் நிறைந்த காடும் உள்ளடக்கியதே அரண்.

More Kurals from அரண்

அதிகாரம் 75: Kurals 741 - 750

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature