திருக்குறள் - 556     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

குறள் 556 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mannarkku mannudhal sengoanmai aqdhindrael" Thirukkural 556 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா. (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியினாலேயே ; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோ லாட்சியில்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற் போம். ஒளி யென்பது ஒருவன் தான் வாழுநாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு. அது பெரும்பாலும் வாய்ச்சொல்லாக நிகழ்வது , புகழ் என்பது ஒருவன் இறந்த பின்பு எல்லாராலும் உயர்த்துச் சொல்லப்படும் உயர்வு . அது பெரும்பாலும் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இலக்கிய வடிவில் திகழ்வது. "உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்" என்னும் நாலடிச் செய்யுளை ( 6 ) நோக்குக . மன்னுதல் இரண்டனுள் முன்னது நிலைபெறுதல் ; பின்னது பொருந்துதல் . கல்வி , கொடை வெற்றி முதலியனவாக ஏதுக்கள் பலவாதலின் , அவற்றினால் வரும் ஒளி புகழ்களும் பலவாயின . 'மன்னாவாம்' என்பதிலுள்ள ஆக்கச்சொல் முன்னுஞ் சென்று இயையும் . செங்கோன்மையால் என்னும் மூன்றாம் வேற்றுமையுருபும் ஒளியும் என்னும் எச்சவும்மையும் தொக்கன . நிலைபெறுதல் (மன்னுதல்) என்றது புகழ்நிலை பெறுதலை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னர்கள் புகழுடன் நிலை பெற்றிருத்தல் என்பது செங்கோன்மையினாலேயாகும், அச்செங்கோண்மை இல்லாவிட்டால் அப்புகழ் உளவாகாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளருக்கு அவசியம் சிறந்த ஆணைகள் அப்படி இல்லையென்றால் ஆட்சியாளருக்கு நற்புகழ் வாய்க்காது.

Thirukkural in English - English Couplet:


To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

ThiruKural Transliteration:


mannarkku mannudhal sengoanmai aqdhindrael
mannaavaam mannark koaLi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore