Kural 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

mannuyir ellaam thuyitri aliththiraa
ennalladhu illai thunai.

🌐 English Translation

English Couplet

All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!.

Explanation

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

2 மணக்குடவர்

இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது. இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.

3 பரிமேலழகர்

(இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. ('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இரவின் கொடுமை கூறி வருந்தியது.) இரா அளித்து - இவ்விரவு இரங்கத்தக்கதாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - இவ்வுலகத்து மற்றெல்லா வுயிர்களையுந் தூங்க வைத்து விட்டதனால், இராமுழுதுந் தூங்காத என்னைத்தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது. நிலைபெற்ற வுயிர் ஒன்றும் இவ்வுலகத்தின்மையாலும், மாந்தரேயன்றி மற்றவுயிர்களும் இரவில் தூங்குவதாலும், மன் என்னுஞ்சொற்கு மற்றுப் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. ஆயினும், சில மாந்தர் இரவிலேயே வழங்குவதனாலும், சில மாந்தர் இரவிலேயே அல்லது இரவிலுந் தொழில் செய்வதனாலும், எல்லாம் என்னுஞ் சொல் பெரும்பான்மை பற்றியதென்று கொள்ளப்படும். பொதுவாக இராக்காலமே தூங்கும் வேளையாதலாலும், பகலுழைப்பாளிகட்கு இரவில் தானாகத் தூக்கம் வந்துவிடுவதனாலும், இரவே தூங்கவைப்பதாகச் சொல்லப்பட்டது. துணையொடு கூடி இன்புறும் உயிர்களையெல்லாந் தூங்கவைத்துவிட்டு, துணையின்றி வருந்தும் என்னைமட்டும் தூங்கவையாது தனக்குத் துணையாக் கொண்டது, இக்கொடிய இரா என்னுங் கருத்தினளாதலால், ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பாம்.

5 சாலமன் பாப்பையா

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!.

6 கலைஞர் மு.கருணாநிதி

இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.

7 சிவயோகி சிவக்குமார்

வாழும் உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து இசைவு தந்த இரவே உனக்கு என்னை அல்லாது வேறு துணை இல்லை.

8 புலியூர்க் கேசிகன்

இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே!

More Kurals from படர்மெலிந்திரங்கல்

அதிகாரம் 117: Kurals 1161 - 1170

Related Topics

Because you're reading about Languishing in Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature