Kural 587

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

maRaindhavai kaetkavaR Raaki aRindhavai
aiyappaatu illadhae otru.

🌐 English Translation

English Couplet

A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.

Explanation

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

2 மணக்குடவர்

பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான். இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

3 பரிமேலழகர்

மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான். (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மறைந்தவை கேட்க வற்று ஆகி -ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லனாகி ; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று -தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றலுள்ளவனே சிறந்த ஒற்றனாவான். ' மறைந்தவை ' சொல்வாரைத்தப்பாது அறிந்து அவரிடம் சென்று, அவர் தாமே அம்மறை பொருட்களைச் சொல்லுமாறு குரங்கெறிவிளங்காயாகச் சில சொற்களைச் சொல்லியும் சில வினைகளைச் செய்தும் , அம்மறைபொருட்களை அவர் வாயினின்று கேட்கும் போதும் அவர் தன்னை எள்ளளவும் அயிராவாறு அச்செய்தியில் தான் முற்றும் பற்றற்றவன் போல் நடித்து , அவர் சொல்வதனைத்தையுங் கேட்க வேண்டியிருத்தலின் 'கேட்க வற்றாகி ' யென்றும் ,கேட்டவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசன் இவற்றிற் கேற்ப வினைசெய்ய முடியாமற் போவதுடன் கலக்கமுங்கொள்ள நேருமாதலின் 'ஐயப்பாடில்லதே ' யென்றும், கூறினார். வல்லது -வற்று (வல்+து).ஏகாரம் தேற்றம் .'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லல் அஃறிணையாதலின், அஃறிணை முடிபு கொண்டது. இந்நான்கு குறளாலும் ஒற்றின் இலக்கணங் கூறப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அறியப்பட வேண்டியவர்கள், மறைவாகச் செய்த செயல்களை அவர்களுக்கு உள்ளாயினரால் கேட்கவல்லவனாகி, கேட்டறிந்த செயல்களிலே பிறகு சந்தேகம் இல்லாதபடி துணிய வல்லவனே ஒற்றனாவான்.

6 சாலமன் பாப்பையா

ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

அறியமுடியாமல் மறைந்தவற்றை கேட்டு அறிந்து அப்படி அறிந்ததில் ஐயப்பாடு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.

More Kurals from ஒற்றாடல்

அதிகாரம் 59: Kurals 581 - 590

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature