திருக்குறள் - 134     அதிகாரம்: 
| Adhikaram: ozhukkamutaimai

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

குறள் 134 - திருவள்ளுவர் - ThiruValluvar

"marappinum oththuk kolalaakum paarppaan" Thirukkural 134 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும் ; பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு , தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும் . ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் . பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்க வில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று ; அவன் தமிழ வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம் . ஆகவே , அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும் , அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் , தமிழறநூல் முடிபாம் .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்ற வேதத்தினை மறந்துவிட்டான் என்றாலும் திரும்பவும் ஓதிக் கொள்ளலாகும். பார்ப்பான் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து குறைந்து விடுவானேயானால் கெட்டுவிடுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்ப்பவனுக்கு நினைவிழந்து போனானும் ஏற்றுக் கொள்ளலாம், பிறப்பொழுக்கம் அற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளமுடியது.

Thirukkural in English - English Couplet:


Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

ThiruKural Transliteration:


maRappinum oththuk koLalaakum paarppaan
piRappozhukkang kundrak kedum

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore