மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
Transliteration
maruvuka maasatraar kaeNmaion Reeththum
oruvuka oppilaar natpu.
🌐 English Translation
English Couplet
Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
Renounce alliance with the men of evil way.
Explanation
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
2 மணக்குடவர்
குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.
3 பரிமேலழகர்
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மாசு அற்றார் கேண்மை மருவுக-மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய நட்பையே பயிலுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக-அறியாமை கரணியமாக உள்ளத்தால் பொருந்தாதவரொடு செய்துகொண்ட நட்பை அவர் விரும்பிய தொன்றைக் கொடுத்தாயினும் விட்டுவிடுக. மாசற்றார் கேண்மை இருமையின்பமும் பயத்தலால் 'மருவுக' என்றும், மாசுற்றார் கேண்மை இருமைத் துன்பமும் விளைத்தலால் "ஒருவுக" என்றும், கூறினார். சிற்றிழப்பாற் பேரிழப்பைத் தடுப்பது அறிவுடைமையேயாதலால், 'ஒன்றீத்து மொருவுக' என்றார். இதனால் கொள்ளுவதும் தள்ளுவதுமான இருவகை நட்புங் கூறப்பட்டன.
5 சாலமன் பாப்பையா
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.
6 கலைஞர் மு.கருணாநிதி
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
மாற்றிக்கொள்ள வேண்டும் மாசற்றவர்களை நண்பர்களாக. எதையாவத் கொடுத்து ஒதுக்கபட வேண்டும் ஒத்திசைவு கொள்ளார் நட்பை.
More Kurals from நட்பாராய்தல்
அதிகாரம் 80: Kurals 791 - 800
Related Topics
Because you're reading about Testing Friendship