Kural 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

matimai kutimaikkaN thangindhan onnaarkku
atimai pukuththi vidum.

🌐 English Translation

English Couplet

If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.

Explanation

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

2 மணக்குடவர்

குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.

3 பரிமேலழகர்

மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மடிமை குடிமைக்கண் தங்கின் -சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் -அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும். மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக் கேட்டை. குடிமை குடிசெய்யுந்தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை , ' தன்னொன்னார்க்கு ' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச் செல்வம் ,இன்பம் , அறிவு , ஒழுக்கம் , ஆட்சி ,வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச்செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மடியானது நற்குடியில் பிறந்தவனிடத்தில் இருந்துவிடுமானால், அது அவனைத் தன்னுடைய பகைவர்களுக்கு அடிமையாகும் தன்மையினை உண்டாக்கிவிடும்.

6 சாலமன் பாப்பையா

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

8 சிவயோகி சிவக்குமார்

சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.

More Kurals from மடியின்மை

அதிகாரம் 61: Kurals 601 - 610

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature