திருக்குறள் - 610     அதிகாரம்: 
| Adhikaram: matiyinmai

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

குறள் 610 - திருவள்ளுவர் - ThiruValluvar

"matiyilaa mannavan eydhum atiyalandhaant" Thirukkural 610 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -ஒருமிக்க அடைவான். திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்) மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே , குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் ' என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன அடியளவினாலே எல்லா உலகையும் அளந்தவனுடைய பரப்பு முழுவதையும் மடியில்லாத (சோம்பலில்லாத) மன்னன் ஒரே காலத்தில் ஒருங்கே அடைவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.

Thirukkural in English - English Couplet:


The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.

ThiruKural Transliteration:


matiyilaa mannavan eydhum atiyaLandhaant
Thaaaya thellaam orungu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore