Kural 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

matriyaan ennulen manno avaroti-yaan
utranaal ulla ulen.

🌐 English Translation

English Couplet

How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.

Explanation

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.

2 மணக்குடவர்

யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

3 பரிமேலழகர்

(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்து படுநிலை யடைகின்றாய். அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்? நான் உயிர்வாழ்வதற்குக் காதலர் தூது வருதல். நம் தூது அவரிடம் சேர்தல் முதலிய பிறவழிகளும் உளவேனும், யான் அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்பர் பரிமேலழகர். 'நாள்' ஆகுபொருள்.

5 சாலமன் பாப்பையா

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.

7 சிவயோகி சிவக்குமார்

மற்றபடி நான் தன் நெஞ்சத்தில் நினைத்து வாழ வேறு உண்டோ அவரோடு உறவுக் கொண்ட நாட்களைத் தவிர.

8 புலியூர்க் கேசிகன்

காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

More Kurals from நினைந்தவர்புலம்பல்

அதிகாரம் 121: Kurals 1201 - 1210

Related Topics

Because you're reading about Lamenting the Beloved

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature