Kural 829

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

mikachcheydhu thammeLLu vaarai nakachcheydhu
natpinuL saappullaR paatru.

🌐 English Translation

English Couplet

'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.

Explanation

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

2 மணக்குடவர்

பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.

3 பரிமேலழகர்

மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) ¢என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மிகச்செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாவாறு புறத்தில் அளவிறந்து நட்புச்செய்து அகத்தில் தம்மை இழிவாயெண்ணும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து - தாமும் புறத்தே நட்பாடி அவர் மகிழும் வண்ணம் செய்து; சாப்புல்லல் பாற்று - அகத்தே அந்நட்புச் சாகும் வண்ணம் பொருந்தும் பான்மையுடையது அரசியன் முறை. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்." (குறள். 158) என்றும், "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்." (குறள். 214) என்றும், முற்கூறிய ஆசிரியரே இங்கு உள்ளொன்று புறம்பொன்றாகப் பேசி நடிப்பவரைப் பிறரும் பின்பற்ற வேண்டுமென்று கூறிய தென்னையெனின், முற்கூறியது பொதுவியலைச் சார்ந்த இல்லறத்திலுந் துறவறத்திலும் தனிப்பட்டவர் வாழ்க்கைக் குரியதென்றும், இங்குக் கூறியது நாடு முழுவதையுந் தழுவிய வேத்தியற்குரிய தென்றும், வேத்தியலிலும் பொதுவியலறத்தைக் கடைப்பிடிப்பின் உலகம் நடைபெறாதென்றும், இங்ஙனம் ஆவியியன்மையையும் (Spirtualism) பொருளியன்மையையும் (Materialism) இணைத்து நடைமுறைக்கேற்ற வாழ்க்கைச் சட்டவியல் வகுத்தவர் திருவள்ளுவரேயென்றும், அறிந்துகொள்க. சாவ என்பதன் ஈறுகெட்டது மரூஉப்புணர்ச்சித் திரிபு. "சாவ வென்னுஞ் செயவென் னெச்சத்து இறுதி வகரங் கெடுதலு முரித்தே." என்பது தொல்காப்பியம் (எழுத். உயிர். 7) "கோட்டின்வாய்ச் சாக்குத்தி" (கலித். 105) 'பாற்று' என்னும் குறிப்பு வினைமுற்று அரசியன் முறை என்னும் வினைமுதலை அவாவிநின்றது.

5 சாலமன் பாப்பையா

வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.

8 புலியூர்க் கேசிகன்

வெளிப்பட மிகுதியாக நட்புச்செய்து, உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை, நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்துவிடல் வேண்டும்.

More Kurals from கூடாநட்பு

அதிகாரம் 83: Kurals 821 - 830

Related Topics

Because you're reading about False Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature