திருக்குறள் - 708     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

குறள் 708 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mukamnhoakki nirka amaiyum agamnhoakki" Thirukkural 708 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின். இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இதற்கு ஈருரைகள் உள. (1) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித்துணையாகக் பெற்றால்; முகம் நோக்கி நிற்க அமையும்-அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே நின்றாற் போதும்; தன் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லவேண்டியதில்லை. அவர் தாமாகச் செய்தியை அறிந்து கொள்வார். (2) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறை வேண்டுவான், தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் உற்ற குறையை யுணர்ந்து அதைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர்தன் முகம்நோக்கும் எல்லையில் தானும் அவர் முகம் நோக்கி நின்றாற்போதும். இது பரிமேலழகருரையைத் தழுவியது. இவ்வதிகாரம் அரசரைச் சார்ந்து ஒழுகுபவர் அவர் குறிப்பறிதலைப் பற்றியதாதலாலும், குறையுறுவான் செய்தி'இரவு' அதிகாரத்திற்கே ஏற்றதாதலாலும், இப்பொருட்கு 'உணர்வார்' என்னுஞ் சொற்கு வழிநிலை வினைப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதனாலும், இவ்வுரை முன்னது போற் சிறந்ததன்றாம் . இம் மூன்று குறளாலும் குறிப்பறிதற்கு முகங் கருவியென்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அகம் அறிந்து ஆற்ற வல்லவரை துணையாக பெற்றால் அவர் முகம் பார்க்க நிற்பதே போதுமானது.

Thirukkural in English - English Couplet:


To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.

ThiruKural Transliteration:


mukamnhoakki niRka amaiyum agamnhoakki
utra thuNarvaarp peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore