திருக்குறள் - 747     அதிகாரம்: 
| Adhikaram: aran

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

குறள் 747 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mutriyum mutraa therindhum araippatuththum" Thirukkural 747 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்றியும்-வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும்-அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்றுதிரண்டு முனைந்து பொருதும்; அறைப்படுத்தும்-அமைச்சரையும் படைத்தலைவரையும் அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெறும் பொருள் கொடுத்து வயப்படுத்திக் கோட்டைவாயிலைத் திறக்கச் செய்தும்; பற்றற்கு அரியது-உழிஞையாராற் கைப்பற்ற முடியாததே; அரண்-சிறந்த கோட்டை யரணாவது. இம்மூன்று போர்வலக்காரங்களுள்ளும், முதலது மதிற்சிறப்பாலும், இரண்டாவது நல்லாளாலும், மூன்றாவது அதிகாரிகளின் நேர்மையாலும், வாயாவாம். அறைப் படுத்தலெனினும் அறைபோக்குதலெனினும் கீழறுத்தலெனினும் ஒன்றே. கையூட்டாற் காட்டிக் கொடுக்கச் செய்தல் என்பது இவற்றின் பொருள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முழுவதையும் வளைத்தோ, முழுவதையும் வளைக்காமல் அறிந்தோ, சுழ்ச்சியால் பிரிவுபடுத்தியோ கைப்பற்ற கடினமாக இருப்பது அரண்.

Thirukkural in English - English Couplet:


A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

ThiruKural Transliteration:


mutriyum mutraa theRindhum aRaippatuththum
patraR kariyadhu araN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore