Kural 1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

muyakkidaith thanvali poazhap pasapputra
paedhai perumazhaik kan.

🌐 English Translation

English Couplet

As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.

Explanation

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

2 மணக்குடவர்

யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

முயக்கிடைத் தண்வளி போழ- அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்குமிடையே ஒரு சிறுதென்றற் போழ்ந்து நுழைந்ததாக; பேதை பெருமழைக் கண் பசப்பு உற்ற- அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலையடைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையுமாகிய மாபேரிடையீடுகளையெல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ! 'போழ' என்றது இருவருடம்பும் ஒன்றென ஒன்றியிருந்தமை தோன்ற நின்றது.

5 சாலமன் பாப்பையா

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

6 கலைஞர் மு.கருணாநிதி

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

7 சிவயோகி சிவக்குமார்

உறவுக்கு இடைப்பட்ட குளிர்காற்றால் பசப்புற்ற இளம்பெண் பெருமழையைக் கண்டது கண்.

8 புலியூர்க் கேசிகன்

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே!

More Kurals from உறுப்புநலனழிதல்

அதிகாரம் 124: Kurals 1231 - 1240

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature