நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.
Transliteration
naachchetru vikkuLmael vaaraamun nalvinai
maeRsendru seyyap padum.
🌐 English Translation
English Couplet
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Explanation
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
2 மணக்குடவர்
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
3 பரிமேலழகர்
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - பேசமுடியாவாறு நாவையடக்கி விக்கல் எழுவதற்கு முன்; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - இல்லறத்தாரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிற்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும். நாச்செற்று விக்குள்மேல் வருதல் உயிர் போதற்கடையாளமாம். அன்று செய்தலேயன்றிச் சொல்லுதலும் கூடாமையின் ' வாராமுன் ' என்றும், "ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு." ஆதலால் ' மேற்சென்று' என்றுங் கூறினார். நிலையாமை நோக்கி நல்வினை விரைந்து செய்யத் தூண்டியவாறு.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பேச முடியாதபடி நாவினை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னமேயே அறச் செயலானது விரைவாகச் செய்யப்படுதல் வேண்டும்.
6 சாலமன் பாப்பையா
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
8 சிவயோகி சிவக்குமார்
நாக்கு விக்குளால் அடைபடுவதற்கு முன் (மரணத்திற்கு முன்) நல்ல செயல்களை விரும்பி செய்திடல் வேண்டும்.
More Kurals from நிலையாமை
அதிகாரம் 34: Kurals 331 - 340
Related Topics
Because you're reading about Impermanence