திருக்குறள் - 924     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

குறள் 924 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naan ennum nallaal purangotukkum kallennum" Thirukkural 924 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு- கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு; நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் - நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள். பெற்ற தாய்க்கும் வெறுப்பை விளைத்தலின் 'பேணா' என்றும், ஒழுக்கக் கேட்டை மட்டுமன்றி உயிர்க் கேட்டையும் உண்டாக்குதலின் 'பெருங்குற்றம்' என்றும் , கள் வெறியர் மானத்தை அறவே இழந்து விடுதலின் 'நாண்.......புறங்கொடுக்கும்' என்றும், கூறினார். 'நல்லாள்' என்பது அழகுபற்றிப் பெண்ணிற் கொருபெயர். 'நல்லபிள்ளை' என்னும் உலக வழக்கையும், மைப்படு மழைக்கணல்லார் (சீவக.2881) என்னும் செய்யுள் வழக்கையும், நோக்குக.நாண் மென்மைக் குணமாதலின் பெண்ணாக வுருவகித்தார். "பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி" என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. 'கள்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் கள்ளுண்டல் ஒளியிழத்தற்குக் கரணியமென்று கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம் என்ற நல்லவள் வெளியேறுவாள் கள்ளென்னும் நன்மை தராத பெருங்குற்றம் செய்தால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

Thirukkural in English - English Couplet:


Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

ThiruKural Transliteration:


naaN-ennum nallaaL puRangotukkum kaLLennum
paeNaap perungutrath thaarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore