திருக்குறள் - 641     அதிகாரம்: 
| Adhikaram: solvanmai

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

குறள் 641 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naanhalam ennum nalanutaimai anhnhalam" Thirukkural 641 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாநலம் என்னும் நலன் உடைமை -நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று - அந்நன்மை வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும் அடங்காது தனிப்பட்டதாம். நாவின் நலம் நாநலம். அது நாவின் நன்மையும் வன்மையுங் கலந்ததாம். நன்மை பிறருக்கு நன்மை செய்வதும் வன்மை பிறரை வயப்படுத்துவது மாகும். இப்பேறு தனிப்பட்டதாதலின், 'யாநலத்துள்ளதூஉமன்று' என்றார். 'உள்ளதூஉம்' இன்னிசையள பெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மை பயக்கும் வார்த்தையே நாநலம் என்ற நலனுடைமை(ஆரோக்கியம்) அத்தகைய நலம் போல் அடைந்த நலத்தில் சிறந்தது இல்லை.

Thirukkural in English - English Couplet:


A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

ThiruKural Transliteration:


naanhalam ennum nalanutaimai anhnhalam
yaanhalaththu uLLadhooum andru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore