திருக்குறள் - 1297     அதிகாரம்: 
| Adhikaram: nenjotupulaththal

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

குறள் 1297 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naanum marandhaen avarmarak kallaaen" Thirukkural 1297 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு-தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லா மடநெஞ்சின் சேர்க்கையினால் ; நாணும்மறந்தேன்-என் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்துவிட்டேன். மாணாமை மானத்தைக் காத்துக்கொள்ளாமை . மடமை,கண்டபோது நினைத்துக் காணாதபோது மறக்கவேண்டிய தவற்றைக் காணாதபோது நினைத்துக் கண்டபோது மறத்தல். நாண் , பல்லாண்டு கூடியொழுகிய பின்பும் அன்று கண்டாற்போல் உள்ளமும் உடம்பும் ஒடுங்குதல். எஞ்ஞான்று மெங்கணவ ரெந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் (நாலடி.385) கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலால் ' நாணும் மறந்தேன் ' என்றாள். உம்மை உயர்வு சிறப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெட்கத்தையும் மறந்தேன் அவரை மறக்காத என் மாறாத மடத்தனமான நெஞ்சத்துடன் சேர்ந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே!

Thirukkural in English - English Couplet:


Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.

ThiruKural Transliteration:


naanum marandhaen avarmarak kallaaen
maanaa madanenjir pattu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore