நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Transliteration
naataadhu nattaliR kaetillai nattapin
veetillai natpaaL pavarkku.
🌐 English Translation
English Couplet
To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.
Explanation
As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
2 மணக்குடவர்
நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை: நட்டபின் அவனை விடுதலில்லை யாயின். இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.
3 பரிமேலழகர்
நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை. (ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.) .
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை-நட்பை நிலையாகக் கைக்கொள்ள விரும்பியவர்க்கும் வேண்டியவர்க்கும், ஒருவரோடு நட்புச்செய்தபின் அவரைவிட்டு விலகுதல் இயலாது; நாடாது நட்டபின் கேடு இல்லை-ஆதலால், ஆராயாது நட்புச்செய்தல் போலக் கேடுதருவது வேறொன்றும் இல்லை. சிலர் ஒருவரோடு நட்புக்கொண்டபின், அவரை விட்டுவிலக விரும்பாமல் அல்லது துணிவில்லாமல் இருக்கலாம். சிலர் தொழிற் கூட்டுப்பற்றி ஒருவரோடு நட்புக்கொண்டு, ஒருகாலும் விலக முடியாவாறு வாழ்நாள் ஒப்பந்தஞ்செய்திருக்கலாம்: அல்லது கயவரோடு தொடர்புகொண்டு அவர் பிடிக்குள் அகப்பட்டு விலக முடியாதவராயிருக்கலாம். இவ்விருசாராரையும் நோக்கியே 'நட்டபின் வீடில்லை' என்றார். இம்மைக்குரிய பொருளின்ப விழப்பு மட்டுமன்றி, மறுமைக்குரிய அறவிழப்பும் நேருமாதலால், 'நட்டலிற் கேடில்லை' என்றார். 'நாடுதல்' குணங்களையுஞ் செயல்களையும் நேரடியாகவும் பிறர் வாயிலாகவும் ஆராய்தல். 'கேடு' ஆகுபொருளி.
5 சாலமன் பாப்பையா
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
7 சிவயோகி சிவக்குமார்
நாடி உறவாடாத நட்பால் கேடு உண்டாகாது, நாடி உறவாடினால் தனக்கான தன்மை மாறும் என்பதை அறிந்து நட்பை ஆளவேண்டும்.
More Kurals from நட்பாராய்தல்
அதிகாரம் 80: Kurals 791 - 800
Related Topics
Because you're reading about Testing Friendship