"naatenpa naataa valaththana naatalla" Thirukkural 739 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
நாடு என்ப நாடா வளத்தன-நாடென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பிறநாட்டுப் பொருள்களின் தேவையின்றித் தமக்கு வேண்டிய பொருள் வளமெல்லாம் தம்மகத்தே கொண்டன; நாட வளம் தரு நாடு நாடு அல்ல-இங்ஙனமன்றிப் பிறநாட்டுப் பொருள்களை நாடிப்பெற்று அதனால் வளம் பெறும் நாடுகள் நாடுகளாகா. இனி, 'நாட வளந்தரு நாடு' என்பதற்கு, பிறநாட்டுப் பொருள்களை நாடுமாறு குன்றிய வளந்தரு நாடுகள் என்றுரைப்பினுமாம். எல்லா வகையிலும் தன்னிறைவானதே தலைசிறந்த நாடென்பது கருத்து. இக்குறட்குத் "தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர் பாற்றானே வந்தடையுஞ்செல்வத்தையுடையவற்றை நூலோர்நாடென்று சொல்லுவர்;ஆதலாற்றேடிவருந்தச் செல்வமடைவிக்கும் நாடுகள் நாடாகா." என்று உரைத்து,"நாடுதல் இருவழியும் வருத்தத்தின்மேனின்றது." என்று சிறப்புரையுங் கூறினார் பரிமேலழகர். தேடி வருந்தாமல்தானே வந்தடையுஞ் செல்வமுள்ள நாடு இவ்வுலகில் எங்குமின்மையாலும், இயற்கைவிளைபொருளையும் விளையுமிடஞ்சென்று தொகுக்க வேண்டியிருப்பதனாலும், மெய் வருத்தமில்லா வாழ்வு சோம்பலையும் நோயையும் விளைக்குமாதலாலும், அது உரையன்மையறிக. "பாடில்லாற் பயனில்லை." என்னும் பழமொழியையும் வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த்-தாளாண்மை தாழ்க்கு மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று. என்னும் பழமொழிச் செய்யுளையும் (151) நோக்குக.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
நாடு என்பது முயற்சி இல்லாமலேயே வளம்பல பெற்றிருக்க வேண்டும். முயற்சியால் வளம் தருவது நாடாகாது.
Thirukkural in English - English Couplet:
That is a land that yields increase unsought,
That is no land whose gifts with toil are bought.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
ThiruKural Transliteration:
naatenpa naataa vaLaththana naatalla
naata vaLandharu naadu.