திருக்குறள் - 553     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

குறள் 553 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naatorum naati muraiseyyaa mannavan" Thirukkural 553 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் - தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறை செய்யாத அரசன் ; நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடிழப்பான். நாள்தொறும் நாடிழத்தலாவது, "கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் .......................................... நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து வதால்" . (சிலப். 11:60 - 45) வரவர வளங்குன்றுதலும் , குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங்கைப்பற்றப் பெறுதலுமாம் . நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது. "குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து , அதற்குத் தக முறைசெய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும் என்றவாறு" , என்பது மணக்குடவருரை .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தனது நாட்டில் நிகழ்பவற்றை நாள்தோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறைகளைச் செய்யாத மன்னன் நாள்தோறும் நாட்டினை இழப்பான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாள்தோறும் ஆராய்ந்து செயலாற்றாத ஆட்சியாளர்களின் நாடு நாள்தோறும் கெடும்.

Thirukkural in English - English Couplet:


Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.

ThiruKural Transliteration:


naatoRum naati muRaiseyyaa mannavan
naatoRum nhaadu kaedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore