Kural 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

nakalvallar allaarkku maayiru Gnaalam
pakalumpaaR pattandru iruL.

🌐 English Translation

English Couplet

To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.

Explanation

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

2 மணக்குடவர்

பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உண்மகிழ்தல் மாட்டாதார்க்குப் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கட் கிடந்ததாம்.

3 பரிமேலழகர்

நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும். ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.

5 சாலமன் பாப்பையா

நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

7 சிவயோகி சிவக்குமார்

அடுத்தவருடன் ஒத்திசைவு அடைய வல்லவருக்கு அல்லாமல் மற்றவருக்கு இரண்டு கூறாக இருக்கும் இந்த உலகம் பகல் பொழுதாக இருப்பினும் இருளாகவே இருக்கும்.

8 புலியூர்க் கேசிகன்

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

More Kurals from பண்புடைமை

அதிகாரம் 100: Kurals 991 - 1000

Related Topics

Because you're reading about Courtesy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature